சென்னை: மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் நியமனம் தொடர்பாக சிறப்புத் தேர்வு நடத்துவதற்கு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1,880 கணினி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்து, அதற்காக சிறப்புத் தேர்வு நடத்தவும் திட்டமிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிறப்புத் தேர்வு நடத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, கணினி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
கணினி ஆசிரியர் நியமனம் தொடர்பான சிறப்புத் தேர்வை நடத்த, அரசுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் அரசின் முடிவு ஏற்கத்தக்கது. சிறப்புத் தேர்வை கண்டிப்புடனும், ஒரேமுறையில் நடத்த வேண்டும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும், அரசு உறுதியளித்தபடி பி.எட், எம்.எட். பட்டதாரிகள் உள்பட அனைவரும் இத்தேர்வில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.