தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணித்து உள்ளதால், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே கலந்தாய்வு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஜூலை மாதம் 11 ஆம் தேதி கலந்தாய்வு துவங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து இரண்டாவதுகட்ட கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. மொத்தமுள்ள 82,000 இடங்களில் இதுவரை 53,938 இடங்கள் நிரம்பியுள்ளன.
72,517 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இதுவரை 54,216 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். சுமார் 278 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு கல்லூரிகளில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 18,000 பேர் கலந்தாய்வைப் புறக்கணித்துள்ளனர்.
இதுகுறித்து பொறியியல் கல்லூரி சேர்க்கை அதிகாரி ரைமண்ட் கூறுகையில், "தற்போதைய நிலவரப்படி இன்னும் 29,000 இடங்கள் காலியாக உள்ளன. 3ஆவது கட்டக் கலந்தாய்வு 16 ஆம் தேதி துவங்குகிறது. முதலில் 31 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி 26 ஆம் தேதி வரை மட்டுமே கலந்தாய்வு நடக்கும்.
12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களில் துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு 31 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் நடத்தப்படும்" என்றார்.