Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணா நூற்றாண்டு விழா: மாணவ, மாணவிகளுக்கு போட்டி- மு.க.ஸ்டாலின்!

அண்ணா நூற்றாண்டு விழா: மாணவ, மாணவிகளுக்கு போட்டி- மு.க.ஸ்டாலின்!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (15:14 IST)
அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட உள்ளதாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தகுதியுடையவராவர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆக‌ஸ்‌ட் 23, 24 ஆகிய நாட்க‌ளி‌ல் முதற் கட்டமாகவும் ஆக‌ஸ்‌ட் 30, 31 ஆகிய நாட்க‌ளி‌‌ல் இரண்டாவது கட்டமாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முதல்நிலைப் போட்டிகள் நடைபெறும்.

பேச்சுப் போட்டியில் 'அறிஞர் அண்ணா வழியில் கலைஞர்', 'மொழிப் போர் களத்தில் பெ‌ரியாரு‌ம், அண்ணாவும், கருணா‌நித‌ியு‌ம்', ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 7 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும்.

கட்டுரை போட்டியில் 'திராவிடத்தின் நிலை உயர்த்திய தலைவர்கள்', 'ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு' ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். பேனா மட்டும் எடுத்து வரவேண்டும். தாள்கள் போட்டி அறையில் தரப்படும். ‌பி‌ற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4 மணிவரை நடைபெறும்.

கவிதை ஒப்பித்தல் போட்டியில் "இதயத்தைத் தந்திடு அண்ணா'' எனும் தலைப்பில் விண் முட்டும் மலையோரம் எனத் தொடங்கி உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா என்று அவரது மறைவு குறித்து 9.2.1969 அன்று கருணா‌நி‌தி அளித்த கண்ணீர் கவிதாஞ்சலி.

"புறநானூற்றுத்தாய்-1'' எனும் தலைப்பில் கருணா‌நி‌தி எழுதிய 'குடிசைதான் ஒரு புறத்தில்' எனத் தொடங்கி வாளிங்கே அவன் நாக்கெங்கே என முடியும் கவிதை. இந்த கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை ஒப்பித்தல் வேண்டும். இசையுடனோ அல்லது ஒப்பனை அணிந்தோ கவிதையை ஒப்பித்தல் கூடாது.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் சென்னையில் நடைபெறும்.

இறுதிப் போட்டி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

இறுதிக்கட்ட போட்டிகளுக்கான பரிசுகள் சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலையத்தின் சான்றுகளோடு, அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil