அரசு கலைக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் அடிப்படை வசதிகள் கிடைக்கும். முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக துவங்க முடியும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
அரசு கலைக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் அடிப்படை வசதிகள் கிடைக்கும். முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக துவங்க முடியும்.
தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள், 7 கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்துக் கல்லூரிகளையும் அரசு நடத்த வேண்டும் என்பது சாத்தியமில்லை. தனியாரின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அரசு கல்லூரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றினால் கல்லூரி முதல்வரே, பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவார். ஆசிரியர்களே சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி அளிக்க முடியும். பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து கூடுதல் நிதி பெறமுடியும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.