அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட உள்ளது.
சென்னையில், தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த தி.மு.க இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான விவரம் வருமாறு:
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் அரும்பணிகளையும் படைப்புகளையும் கருத்துக்களையும் வருங்கால இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உயர் நிலை, மேல்நிலைபள்ளி, மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பரிசுகளை இளைஞர் அணி சார்பில் வழங்கிடுவதோடு, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணங்களை, இளைஞர் அணி சார்பில் வழங்கி அவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்கு உதவுதல்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை யொட்டி ஆகஸ்ட் 23, 24, 30, 31 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெறும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், போட்டிகள் நடத்திடவும் பின்னர் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்து பரிசுகளையும் ஊக்கத் தொகையையும் செப்டம்பர் மாதம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.