Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‎ஹோமி பாபா நூற்றாண்டு விழா: கல்லூரி மாணவர்களுக்கு போட்டி அறிவிப்பு!

‎ஹோமி பாபா நூற்றாண்டு விழா: கல்லூரி மாணவர்களுக்கு போட்டி அறிவிப்பு!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
'இந்திய அணுசக்தியின் சிற்பி' என்று போற்றப்படும் டாக்டர் ‎ஹோமி பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியை மத்திய அணுசக்தித் துறை அறிவித்துள்ளது.

' இந்திய அணுசக்தி துறையின் சிற்பி' என்று புகழப்படும் டாக்டர் ‎ஹோமி பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா 2008ஆ‌ம் ஆண்டு அக்டோபர் 30 முதல் ஓராண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேசிய அளவிலான 20-வது கட்டுரைப் போட்டியை மத்திய அணுசக்தித் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த பிறகு பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரிகளில் முழுநேர பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம்.

'டாக்டர் ‎‎‎ஹோமி பாபா இந்திய அணுசக்தி திட்டத்தின் நிறுவனர் மற்றும் சிற்பி' என்ற தலைப்பில் 1000 வார்த்தைகளுக்குள் பொதுக்கட்டுரை ஒன்று எழுத வேண்டும். இது தவிர, 'நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு அணுசக்தி', 'மனிதகுலத்துக்கு பயன்படும் அணு தொழில்நுட்பம்', 'எலக்டிரான் கற்றை தொழில்நுட்பம்' ஆகிய 3 தலைப்புகளில் ஏதாவது ஒன்று பற்றி 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்திய மொழி ஏதாவதொன்றில் எழுதலாம்.

கல்வி நிறுவனத்தின் முதல்வருடைய ஒப்புதல் கையெழுத்துடன் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் (இ-மெயில்), தொலைநக‌‌ல் (பேக்ஸ்) மூலமாக அனுப்பும் கட்டுரைகள் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌‌ப்படமா‌ட்டாது.

போட்டிக்கு வந்து சேரும் கட்டுரைகளில் இருந்து முதல் கட்டமாக 36 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்படும். கட்டுரை பற்றி அவர்கள் விளக்கிப் பேச வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்று வர 3ஆ‌ம் வகுப்பு இலவச கு‌ளி‌ர் சாதன (ஏ.சி.) ரயில் கட்டணம் வழங்கப்படும்.

கட்டுரையின் தரம் மற்றும் அதை விளக்கிப் பேசியதன் அடிப்படையில் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசு 3 பேருக்கு ரூ.15,000, 2-வது பரிசு 3 பேருக்கு ரூ.10,000, 3-வது பரிசு 3 பேருக்கு ரூ.5,000 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் 36 பேரில் முதல், 2-வது, 3-வது பரிசு பெறுபவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு ரூ.2000 வழங்கப்படும்.

ஹோமி பாபாவின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆ‌ம் தேதி இ‌ந்த பரிசுகள் அனை‌த்து‌ம் வழங்கப்படும்.

உதவி நிர்வாக அதிகாரி பொது மக்கள் விழிப்புணர்வு பிரிவு, அணுசக்தித் துறை, அணுசக்தி பவன், சி.எஸ்.எம். சாலை, மும்பை-400 001 என்ற முகவரிக்கு செப்டம்பர் 1ஆ‌ம் தேதிக்குள் கிடைக்குமாறு கட்டுரைகளை அனுப்ப வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil