புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள், புகைப்படம் எடுக்கும் போது வராதவர்களுக்காக இலவச பயண அட்டை வழங்கும் மையங்கள் சென்னையில் 4 இடங்களில் செயல்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2008-09ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயணச் சீட்டு, அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள், புகைப்படம் எடுக்கும் போது வராதவர்கள் ஆகியோர் வசதிக்காக இலவச பயணச்சீட்டு வழங்கும் மையங்கள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அடையார், அண்ணாநகர். தி.நகர், தண்ணடையார்பேட்டை ஆகிய நான்கு பணிமனைகளில் கடந்த 1ஆம் தேதி முதல் மதியம் 1 மணி முதல் 5.45 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை பள்ளிகள் மூலம் பெற்று மையங்களுக்குச் சென்று இலவச பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 10க்கு மேல் இருப்பின் பள்ளிக்கே வந்து புகைப்படம் எடுத்து இலவச பயண அட்டை கொடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.