தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் வசுந்தராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்காக தனியார் சுயநிதி ஆசிரியர் பள்ளி நிறுவனங்களில் சேருவதற்கு கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளிடம் கல்வி கட்டணமாக ரூ.23 ஆயிரம் மட்டும் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட (ரூ.23 ஆயிரம்) மாணவர்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பல கல்வி நிறுவனங்கள் மீது புகார் மனுக்கள் வந்துள்ளன.
அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் அந்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.