பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 340 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் 75,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 11ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 41,872 பேரில் 34,000 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பல மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும் உரிய இடங்களை தேர்வு செய்யவில்லை.
இதனால் இன்னும் காலியாக உள்ள 47,000 இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. கட் ஆப் மதிப்பெண் 140.5 வரை பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.