கோவை பி.எஸ்.ஜி கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து, கோவையில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து அவர்களின் கருத்துக்களை தெரிவுக்குழுவினர் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து அன்றைய தினம், மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற உள்ள கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ள தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட 5 அரசு கல்லூரிகள், கோவை பி.எஸ்.ஜி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் கடந்த நிதிநிலை கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.