எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2, பட்டப் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து (30.6.2008 தேதிப்படி) 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்கவும் வேண்டும்.
வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினராக இருந்தால் வயது வரம்பு 45 ஆகும். தற்போது அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிந்துக் கொண்டு இருக்கக் கூடாது. சென்னை மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் ஓராண்டு முடிந்துவிட்டால் சுயஉறுதிமொழி ஆவணத்தை தங்கள் பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் உடனடியாக நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.