Publish Date: Mon, 28 Jul 2008 (12:17 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (12:17 IST)
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர நன்கொடை கேட்டால் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1,50,000 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் அதே அளவுக்குத்தான் வந்துள்ளன. எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். நன்கொடை அளித்து யாரும் பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.32,500-ம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.62,500 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட தனியார் கல்லூரியில் சேர விரும்பினால் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.62,500 மட்டும் கட்டணம் செலுத்தி சேரலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தவிர, நன்கொடையாக பணம் கேட்டால் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.