வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள காவலர் பணி நியமனத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் 30ஆம் தேதிக்குள் மாற்று கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் 2ஆம் நிலை ஆண், பெண் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதம் பெரம்பலூர் மாவட்டத்தில் 420 ஆண்களுக்கும், 107 பெண்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சோந்த விண்ணப்ப முகவரி கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெறும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 1, 132 ஆண்களுக்கும் 225 பெண்களுக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
பதிவு எண் 1600001 முதல் 1600400 வரையுள்ள 400 ஆண்களுக்கு அரியலூர் அரசு கலைக் கல்லூரியிலும், 1600401 முதல் 1600960 வரையுள்ள 560 ஆண்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 1600961 முதல் 1601132 வரையுள்ள 172 ஆண்கள், 6600001 முதல் 6600255 வரையுள்ள 255 பெண்களுக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வுக்குரிய அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கவில்லையென்றால் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளரை வருகிற 30ஆம் தேதிக்கு முன்னதாக சந்தித்து மாற்று அழைப்பு கடிதம் பெற்றுக் கொள்ளலாம்"என்று கூறப்பட்டுள்ளது.