மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 1,395 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இவர்களில் 1,326 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் 69 காலியிடங்கள் உள்ளன.
தர்மபுரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அனுமதிக் கடிதம் பெற்று விட்டு, பொறியியல் படிப்பில் சில மாணவர்கள் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள 69 காலியிடங்கள், புதிய தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 303 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். தமிழகத்தில் உள்ள 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.
ஏற்கனவே அனுமதிக் கடிதம் பெற்று மாற்று மருத்துவக் கல்லூரி கோரியுள்ள மாணவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதிக் கடிதம் அளிக்கப்படும். இந்த மறு ஒதுக்கீடு குறித்து தனியாக மாணவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகை மூலம் தகவல் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.