ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், அந்நிறுவனம் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திடம் அங்கீகாரம், தமிழக அரசின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்று தெரிந்து கொண்ட பிறகே, சேர வேண்டும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை, மேற்கு அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில், தேசிய தொழில் பயிற்சி மையம் என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனம் அதிக வேலைவாய்ப்பு மிக்க மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, கணினி ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை அரசு சான்றுடன் வழங்குவதாகவும், தமிழகத்தில் 122 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஒரு விளம்பரம் செய்துள்ளது.
அந்த பயிற்சிகளை நடத்த தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திடம் அங்கீகாரம், தமிழக அரசிடம் பணியாளர் பட்டியல் அளித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அவற்றைப் பெறவில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் மீது திருவள்ளூர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திடம் அங்கீகாரம், தமிழக அரசின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்று தெரிந்து கொண்ட பிறகே, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்ககத்தை நேரிலோ அல்லது 044-28268027 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.