சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று அந்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் புதுடெல்லி தொலைதூர கல்விக்குழு ஏற்கனவே அங்கீகாரம் அளித்து உள்ளது. 2007ஆம் ஆண்டிற்கு முந்தைய அனைத்து படிப்புகளுக்கும் தற்போது தொலைதூர கல்விக்குழு 2007 ஜூலை 21ஆம் தேதியன்று அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய, தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த பாடங்களும் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கல்வி கற்பவர்கள் தேவைக்கு ஏற்ப அவரவர் வீட்டிலேயே கற்பதற்கு ஏதுவாக இருப்பதால், பாடத்திட்ட அமைப்பை பாராட்டி புதுடெல்லியில் உள்ள தொலைதூர கல்விக்குழு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.