இங்கிலாந்து மாணவர்களுக்கு உலகம் பற்றிய பார்வையை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசு அறிவித்துள்ள திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய 40 மாணவர்கள் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறந்த இங்கிலாந்து பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட பிரதமர் கார்டன் பிரவுன் குளொபல் பெலோஷிப் திட்டத்தின் கீழ், அந்நாட்டின் பயிலும் 100 மாணவர்களுக்கு உலகம் குறித்த அனுபவ அறிவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இந்தியா, சீனா அல்லது பிரேசிலில் 6 வாரங்கள் தங்கி அந்நாடு குறித்த தகவல்களையும், மக்களையும் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்களில், 40 பேர் இந்தியாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்தியா வரும் இங்கிலாந்து மாணவர்களுக்கு, முதற்கட்டமாக இந்திய மொழிகள் (ஹிந்தி, தமிழ்) அறிமுகப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து நாட்டின் சந்தைச் சூழல், சமூகம், அரசு நிர்வாகம், சிறந்த வர்த்தக நிபுணர்களுடன் சந்திப்பு, வரலாற்றுச் சின்னங்கள், முக்கிய நிறுவனங்கள் குறித்த அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதையடுத்து 2ம் கட்டமாக முக்கிய நகரப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இங்கிலாந்து மாணவர்களுக்கு, அங்கு பயிற்றுவிக்கப்படும் கல்விமுறை குறித்து விளக்கப்படுவதுடன், நாட்டின் கலாசாரம், வரலாறு, பொருளாதார வளர்ச்சி, போட்டி நிறைந்த இந்தியச்சூழல், உலக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தேவையான திறமை போன்றவை குறித்து விளக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் இங்கிலாந்து மாணவர்களுக்கு, நுங்கம்பாக்கம் மற்றும் கே.கே.நகரில் உள்ள பத்ம ஷேசாத்ரி பால பவன் பள்ளி, லேடி ஆண்டாள், செட்டிநாடு வித்யாஷ்ரம், சிந்தி மாடல் ஆகிய 5 பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.