சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி.) பொன்விழா வரும் 31ஆம் தேதி நடக்க இருக்கிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து, சென்னை இந்திய தொழில்நுட்ப கழக இயக்குனர் எம்.எஸ்.அனந்த் கூறுகையில், "சென்னையில் கடந்த 1959ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) தொடங்கப்பட்டது. வரும் 31ம் தேதி இதன் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்விழாவை முன்னிட்டு ஐ.ஐ.டி.வளாகத்தில் சர்வதேச கருத்தரங்குகள், தொழிற்சாலை தொழில் நுட்பங்கள் குறித்த விவாதம், புதிய கல்வி திட்டங்கள் தொடங்குதல், இந்திய-ஜெர்மன் பங்களிப்பில் புதிய கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
சென்னை தரமணி அருகே, ஐ.ஐ.டி. சார்பில் ரூ.300 கோடி செலவில் ஆய்வுப் பூங்கா தொடங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.