அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் நியமனம் தொடர்பான விதியை திருத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 1:1 என்ற விகிதத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆங்கில ஆசிரியர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுபவர்கள், இளங்கலை பட்டத்திலும், முதுநிலை பட்டத்திலும் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக படித்திருக்க வேண்டும் என்று விதி இருந்தது.
தற்போது இந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் படிக்காமல் வேறு பாடத்தை முதன்மையாகக் கொண்டு படித்திருந்தாலும், முதுநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை முதன்மையாகக் கொண்டு படித்திருந்தால் போதுமானது என்று விதியை திருத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திருத்தம் 2008 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.