இடைநிலை ஆசிரியர்களைப் பதவி உயர்வு மூலம், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்ப உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தக் காலிப்பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பினால், வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இது குறித்து 4 வார கால அவகாசத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.