அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதல் கட்ட கலந்தாய்வில், தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்களில் 1,395 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. ஆனால் இடம் கிடைத்த பல மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர ஆர்வம் காட்டவில்லை. இந்த ஆண்டு தர்மபுரியில் அரசு மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 85 சீட்கள் கிடைத்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தும் சேராமல், பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சரண்டர் செய்த 69 இடங்கள், தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள 3 இடங்கள் உள்பட தற்போது உள்ள 157 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காகவும் கலந்தாய்வு நடக்க உள்ளது.