தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழிமருத்துவக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த தமிழ் வழிமருத்துவக் கல்வி முறை நடப்புக் கல்வி ஆண்டான 2008-09 முதல் அமலுக்கு வருகிறது. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பாடங்களான, உடற்கூறு இயல் (அனாடமி), உடல் இயங்கியல் (பிசியாலஜி), உயிரி வேதியியல் ( பயோ கெமிஸ்ட்ரி) ஆகிய பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகிறது.
தமிழ் வழிக் கல்வியை விரும்பும் மாணவர்கள் மட்டும் இதனைத் தேர்வு செய்து படிக்கலாம். தமிழ் வழி நூல்கள் தயாரிக்கப்படும். பாடங்களை தமிழில் கற்றுத் தர ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இந்த கல்லூரிகளில் வழக்கம்போல் ஆங்கில வழி மருத்துவப் பாடங்களும் கற்பிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் தெரிவித்துள்ளார்.