திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு சார்பில் பீடித் தொழிலாளர்களுக்காக ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு இத்தகைய மருத்துவ வசதிகளை செய்து தருவதாகக் குறிப்பிட்டார்.
இதேபோல் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகைக்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ராதிகா செல்வி, மேலும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகச் சொன்னார்.
பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், இது 2 குழந்தைகள் வரை மட்டுமே பொருந்தும் என்றும் அமைச்சர் ராதிகா செல்வி மேலும் தெரிவித்தார்.