மாணவிகள் உயர்நிலை கல்வி கற்பதற்கு வழிவகுக்கும் வகையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்கி உள்ளது.
மாணவிகள் தங்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவதை குறைக்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகள் உயர்நிலைப் பள்ளி படிப்பை தொடர்வதை அதிகரிக்கவும், 18 வயது வரை அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவித்த இத்திட்டத்தின்படி, அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகளின் பெயரில் ரூ.3,000 பணம் பொதுத் துறை வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
இத்தொகையை மாணவிகள் தங்களுக்கு 18 வயதை அடைந்ததும் எடுத்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அனைத்து மாணவிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் பயின்று 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் (இவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை) பயன் பெறுவர். 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தைப் பெற மாணவிகளின் அதிகபட்ச வயது வரம்பு அவர்கள் 9ஆம் வகுப்பில் சேரும் போது 16 ஆக (மார்ச் 31ம் தேதி படி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றிப் பெற்று 18 வயதடைந்த மாணவி வைப்புத் தொகையில் இருந்து இந்த ஊக்கத்தொகை பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.