காரைக்கால்: ஒரு பள்ளியில் இருந்து கொண்டே மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மின்னணு கல்வி முறை (இ- லேர்னிங்) புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இத்தகவலை காரைக்காலில் செய்தியாளர்களிடம் தெரிவித்த புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்திற்கு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
இதன்படி ஒரு பள்ளியை சேர்ந்த ஆசிரியர், தனது பள்ளியில் இருந்தபடி மற்றொரு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் என்றார் ஷாஜகான்.
காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போதுள்ள 69 இடங்கள் இவ்வாண்டு முதல் 96 இடங்களாக உயர்த்தப்படுவதாகவும், காரைக்கால் புதுவை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மையத்தில் புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஷாஜகான் மேலும் கூறினார்.