சென்னை: இவ்வாண்டுக்கான பொறியியல் சேர்க்கையில் மின்னணு தகவல் தொழில் நுட்பப் பாடப்பிரிவில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மருத்துவத்தை விட பொறியியல் பாடத்திற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவத்தை விட பொறியியல் பாடத்திற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய கலந்தாய்வில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 14 மாணவர்கள் மருத்துவப் படிப்பை கைவிட்டு, பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இரண்டாம் நாளில் 12 பேர் மருத்துவப் படிப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பொறியியல் பாடத்தில் சேர்ந்தனர்.
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, கடந்த சனிக்கிழமை நிலவரப்படி மின்னணு தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு தான் முதலிடம். மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இதில் சேரத் துடித்தனர்.
இதற்கு அடுத்ததாக கணினி அறிவியல் பாடம் உள்ளது. 3-வது இடத்தில் தகவல் தொழில்நுட்பமும், அதற்கடுத்த இடத்தில் இயந்திரவியல் பாடமும் உள்ளன. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு சிவில் மற்றும் இயந்திரவியல் பிரிவு எடுக்க மாணவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.