முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியியல் படிப்பில் விளையாட்டு பிரிவினருக்கு மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கு 2,517 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதி அடிப்படையில் 400 பேருக்கு கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டது. கலந்தாய்வு மூலம் 100 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விடுதி வசதி போதுமானதாக இல்லை. மாணவ- மாணவிகளின் வசதிக்காக விடுதி வசதியை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, கிண்டி வளாகத்தில் கூடுதலாக 200 பேரும், எம்.ஐ.டி. வளாகத்தில் கூடுதலாக 100 பேரும் விடுதியில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்
முதல் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக விடுதி வசதிக்கான பணிகள் முடிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக 200 ஆராய்ச்சி மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் ஆராய்ச்சியின்போது மாணவர்களுக்கும் பாடம் நடத்துவார்கள். 4 ஆண்டுகளுக்குள் ஆராய்ச்சியை முடித்துவிட வேண்டும். அவர்களுக்கு ரூ.11,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று மன்னர் ஜவஹர் கூறினார்.