முதன்முறையாக பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து நடத்தும் உயர் கல்வி மற்றும் குடியேற்றத்திற்கான IELTS (The International English Language Testing System) தேர்வுகளில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் (ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர்).
அதாவது உலகின் பல்வேறு பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு IELTS தேர்வு நடந்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "உலகளவில் நடத்தப்படும் IELTS தேர்வுகளில் இந்தியர்கள் சராசரியாக 5.97 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதில் தமிழ் மற்றும் இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜெர்மானியர்கள் 7.16 சராசரி தேர்ச்சி விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
உலகளவில் ஆண்களை விடப் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களின் சராசரித் தேர்ச்சி விகிதம் 5.74 விழுக்காடாகவும், பெண்களின் சராசரித் தேர்ச்சி விகிதம் 5.94 விழுக்காடாகவும் உள்ளது.
உலகளவில் IELTS தேர்வு எழுதுபவர்களில் 50 விழுக்காட்டினர் அயல்நாடுகளில் உயர் கல்வி பெறுவதற்கு விரும்புகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் சுமார் 1,700 பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் IELTS தேர்வு முடிவுகளை ஏற்றுக்கொள்வதால், அந்நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள சர்வதேச IELTS நிறுவனத்தின் செயல் இயக்குநர் பெரில் மெய்ரான் கூறுகையில், "இந்த ஆண்டு IELTS தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளைவிட அதிகமாகும். ஒருவரின் ஆங்கிலப் புலமையை முழுமையாக வெளிக்கொணரும் தேர்வாக இது உள்ளது. வெளி உலகிற்குத் தேவையான எழுத்தாற்றல், பேச்சாற்றல், புரிந்துகொள்ளும் திறனை அதிகரித்துக்கொள்ள உதவுகிறது" என்றார்.
IELTS தேர்வுகள் 121 நாடுகளில் 500 மையங்களில் நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆஸ்ட்ரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இத்தேர்வினை எழுதுகின்றனர்.