ஐ.ஐ.டி. படிப்பில் சேர்வதற்கு, தகுதியை உயர்த்துவதற்காக ஆதிதிராவிடர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள பயிற்சி முறையை ரத்து செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐ.ஐ.டி. தலைவரும், மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யிலும், காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.ஐ.ஐ.டி. நிறுவனத்திலும் பி.டெக். படிப்பில் சேர கூட்டு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்வு நடத்தப்பட்ட பிறகு குறைவான மதிப்பெண் நிர்ணயித்ததைவிட குறைவாக இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை நேரடியாக பி.டெக். வகுப்பில் சேர்ப்பதில்லை. ஆனால், மற்ற மாணவர்களை மட்டும் நேரடியாக சேர்த்துவிடுகிறார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தகுதியை உயர்த்திக்கொள்ள தயார்படுத்தக்கூடிய பயிற்சி படிப்பை படிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இந்த படிப்பை படிப்பது மீண்டும் பிளஸ்2 பாடத்தை படிப்பதற்கு சமமாகும். மேலும், இந்த படிப்பை படிப்பதால் ஒரு ஆண்டு வீணாகிறது. இந்த படிப்பை வெற்றிகரமாக முடிக்காவிட்டால் இடம் தருவதில்லை.
ஜாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு தயார்படுத்தக்கூடிய பயிற்சி படிப்பை படிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. இவ்வாறு கூறுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே, இவர்களையும் கூட்டு நுழைவுத்தேர்வு எழுதியதும், நேரடியாக பி.டெக். வகுப்பில் சேர்க்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த இரு நிறுவனங்களிலும் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, இது குறித்து பதில் அளிக்க சென்னை ஐ.ஐ.டி. தலைவருக்கும், மத்திய அரசுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.