பாலிடெக்னிக் முடித்தவர்கள் சேர்ந்து படிக்கும் பகுதி நேர பி.இ. படிப்பை இந்த ஆண்டு மே மாதமே தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, சேலம், கோவை, வேலூர், பர்கூர் ஆகிய இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 1,900 இடங்கள் உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) மூலம் நிரப்பப்படுகின்றன.
பிளஸ்2 முடித்த மாணவர்கள் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். படிப்புக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். ஆனால், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் `லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேருவார்கள். இதேபோல், பாலிடெக்னிக் முடித்து பணியில் இருப்பவர்கள் படிக்க வசதியாக பகுதி நேரமாக பி.இ. படிக்கும் முறையும் இருந்து வருகிறது.
பகுதி நேர பி.இ. படிப்பில் சேருவதற்கு பாலிடெக்னிக் முடித்து 2 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும். டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ ஆண்டுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வுசெய்யப்படுவோர் வேலையில் இருந்துகொண்டே பி.இ. படிப்பை முடித்துவிடலாம்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு மொத்தம் 1,446 இடங்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் இந்த படிப்பு தொடங்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில் பொதுவான பி.இ. படிப்புடன் சேர்த்து மே மாதமே பகுதிநேர பி.இ. படிப்பையும் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.