மைசூர் பல்கலைகழகம் தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் குறைத்துள்ளதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
பல்கலைகழகக் குழு கூட்டம் பதிவாளர் ஏ.பி. இப்ராஹிம் தலைமையில் நடந்தது. அதில் பல்கலைகழக தேர்வு நேரத்தை 180 நிமிடங்களில் இருந்து 150 நிமிடங்களாக குறைப்பது என்று முடுவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2008-09-ம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைகழகக் குழு உறுப்பினர்கள், "சர்வதேச முறைப்படி, போட்டித் தேர்வுகளுக்கான நேரம் ஒரு மதிப்பெண்ணுக்கு 45 வினாடிகள். ஆனால், மைசூர் பல்கலைகழக தேர்வுகளில் 135 வினாடிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிக நேரம் வழங்கப்படுவது மாணவர்களின் திறனை பாதிக்கும்" என்று தெரிவிததுள்ளனர்.
பல்கலைகழக தேர்வு நேர குறைப்பின்படி, பாடத்திற்கான அதிகபட்ச மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படுகிறது.
பல்கலைகழகத்தின் இந்த முடிவை மாணவர்களும், ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைகழக தனியார் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரபாய்ல், "இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது" என்றார்.
கல்வியாளர் கே.பி. வாசுதேவன் கூறுகையில், "பல்கலைகழகம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தக்கூடாது" என்றார்.