தமிழ்நாட்டில் இருந்து இந்தியா சிவில் பணிக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக மத்திய தேர்வாணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சலாம் தெரிவித்தார்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் 12 வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய தேர்வாணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் கே.எஸ்.சலாம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது, டில்லி என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்றாலும் ஆசியாவின் மத்திய பகுதியாக விளங்குகிறது. தனியார் கல்வி மையங்கள் 1950 ல் இருந்து செயல்பட்டு வருகிறது. அவர்கள் கல்வி தரத்தை உயர்த்தியுள்ளனர். நம் நாட்டில் நாற்பது சதவீதம் கற்று தந்தால் சீனாவிலோ நான்காயிரம் சதவீதம் கற்று தருகின்றனர்.
ஒரு மாணவன் தான் தேர்வு செய்யும் பாடத்தில் மட்டுமே சிறந்து விளங்குகிறான். மற்ற பாடங்களில் அவன் அனுபவம் இல்லாமல் இருப்பது நம் வளர்ச்சியின் பெரும் பின்னடைவாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இயந்திரமாக்குகின்றனர். தற்போதுள்ள இளையதலைமுறையினர் தொழில் ரீதியாக சிறப்பாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் வெற்றிபெறவில்லை.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி ஒழுக்கம், பாசம், அன்பு உள்ளிட்டவைகளையும் கற்று தர வேண்டும்.
எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அது என்னவென்றால் இந்திய சிவில் பணிக்கு தமிழகத்தில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவர்களின் கவனம் மென்பொருள் துறைக்கு மாறியுள்ளது. இந்திய சிவில் பணிக்கு 5 லட்சம் பேர் தேர்வு எழுதினால் அதில் 5 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். எனவே முதல் முயற்சியில் தோற்றுவிட்டால் துவண்டுபோகாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் கட்டாயம் இதில் வெற்றிகிட்டும் என்றார்.
சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.