பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்புகளைச் சேர்ந்த 13 லட்சம் மாணவ, மாணவிகள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதி வருகின்றனர்.
மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தால் நடத்தப்படும் இத்தேர்வுகளில், 10-ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 65 ஆயிரத்து 95 மாணவ, மாணவியரும், 12-ம் வகுப்பு தேர்வை 5 லட்சத்து 48 ஆயிரத்து 815 மாணவ, மாணவியரும் எழுதுகின்றனர். இதில் 18 ஆயிரம் பேர் அயல்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். இத்தேர்வுகளை கடந்த ஆண்டு 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், இந்தாண்டு 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பினருக்கு இன்று தகவல் தொழில்நுட்ப தேர்வும், 12-ம் வகுப்பினருக்கு வேதியியல் தேர்வும் நடந்து வருகிறது.
இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றோரும், 373 கண் பார்வையற்றவர்களும் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். நாடு முழுவதிலும் 2 ஆயிரத்து 624 மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வும், 2 ஆயிரத்து 394 மையங்களில் பிளஸ் 2 தேர்வும் நடக்கிறது. தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு கழகம் (NCF) அறிவுறுத்தியபடி, முதல்முறையாக உயர்ந்த சிந்தனை திறனை தூண்டும் 20 விழுக்காடு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.