ஐ.ஐ.டி. - ஜே.இ.இ. தேர்வுகள் உலகிலேயே மிகவும் கடினமான தேர்வுகள் என்றால் அது மிகையாகாது. பொறியியல் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு ஐ.ஐ.டி. மாணவனாக வேண்டும் என்ற கனவுடனேயே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்கள் ஐ.ஐ.டி- ஜே.இ.இ. தேர்வு எழுதுகின்றனர். ஆனால்...
3000 மாணவர்கள் மட்டுமே தேர்வாகின்றனர். இந்த நிலைக்கு காரணம் என்ன?
ஐ.ஐ.டி- ஜே.இ.இ தேர்விற்கு ஒவ்வொரு மாணவரும் விடா முயற்சியுடன் கடினமாகவே உழைக்கின்றனர். ஆனால் தேர்விற்கு தங்களை கூர்மையாக தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மட்டும்தான் வெற்றி பெறுகின்றனர்.
ஐ.ஐ.டி- ஜே.இ.இ மாணவனாக அனைவருக்கும் கனவு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தயாரிப்புகளை எப்போது துவங்குவது என்பதில் மாணவர்களுக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.
1. 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...?
2. 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...?
3. +1 சேரும் முன் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...?
மேற்கூறிய இந்த 3 தெரிவுகள் மாணவர்களுக்கு இருக்கிறது.
ஆனால் சமீபத்திய ஐ.ஐ.டி- ஜே.இ.இ முறைகளின் படி, 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு என்ற 2 தெரிவுகளே உள்ளது. இந்த சூழ்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்தவுடனேயே ஐ.ஐ.டி- ஜே.இ.இ. தயாரிப்புகளுக்கு அடியெடுத்து வைப்பதே சிறந்தது. ஏனெனில் 10ஆம் வகுப்பு முடித்தவுடன் ஒரு மாணவன்தான் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்பவனாகிறான்.
மேலும் +1ல் எந்த பாடத்தை தேர்வு செய்கிறோம் என்பது மிக முக்கியம், ஏனெனில் ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. அடிப்படை கல்விகளில் பலமாக உள்ள ஒருவரைத்தான் தேர்வு செய்யும்.
கடினமான தெரிவுகள்தான்! ஆனால் பயப்படத் தேவையில்லை. முறையான திட்டமிடுதல் மூலம் எந்த ஒரு வாய்ப்பையும் தட்டிப் பறிக்க முடியும். கல்வியின் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மன உறுதியுடன் எடுக்கும் எவரும் இந்த முயற்சியில் தோல்வியடைய வாய்ப்பேயில்லை. கடின உழைப்பு மற்றும் முறையான வழிகாட்டுதல் என்பதே இதனை எட்ட சிறந்த வழிமுறை.
முதல் முயற்சியே வெற்றி முயற்சியாக இதோ சில வழிகள் :
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் : சரியான மனோ நிலையுடன் தயாரிப்பைத் தொடங்குங்கள். எப்போதும் தன்னம்பிக்கையான அணுகுமுறை தேவை. தொடர்ச்சியிலிருந்தும் சீரான படிப்பிலிருந்தும் விலகிவிடாதீர்கள். தேர்வுகள் குறித்த அனைத்து விதமான பயங்களையும், மயக்கங்களையும் களைந்து நம்மால் முடியும் என்று நம்பிக்கை வையுங்கள்.
விரைவில் தயாராகுங்கள் : 11ஆம் வகுப்பிலிருந்தே தயாரிப்பை தொடங்குங்கள். முதலில் தேர்வு செய்யப்படும் 100 முதல் தர மாணவர்கள் தங்கள் தயாரிப்புகளை 11ஆம் வகுப்பிலிருந்து துவங்கியவர்களே.
சரியான வழிகாட்டியை தேர்ந்தெடுங்கள்: பொருத்தமான வகுப்பறை கல்வி அல்லது தபால் வழிக் கல்வி முறையை தேர்வு செய்யுங்கள். இன்றைய போட்டி நிரம்பிய உலகில், உங்கள் போட்டியாளர் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்.
கவனத்தை ஒருங்கிணைக்கவும்: எல்லா வகையான படிப்புகளிலும் ஒரே நேரத்தில் சேராதீர்கள். ஏகப்பட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டாம். படிக்கப்போகும் கல்வி மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை துவக்கத்திலேயே முடிவு செய்யுங்கள். இது குறித்து இதில் வெற்றிபெற்றவர்களை ஆலோசிக்கவும்.
படிப்பதைத் திட்டமிடுங்கள்: பள்ளிக்கு செல்லும் மாணவராயிருந்தால், பள்ளித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு ஆகியவற்றிற்கான வாசிப்புகளை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் பலவீனங்களை அடையாளம் காணுங்கள்: எந்த இடத்தில் உங்கள் உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது என்பதை அடையாளம் காணுங்கள். அதில் அதிக நேரம் செலுத்தி பலவீனத்தையே பலமானதாக மாற்றுங்கள்.
நீங்களாகவே தயாராகுங்கள்: படிப்பிற்கு தயாராகும்போது கணக்குகளை நீங்களாகவே போட்டுப்பாருங்கள். தயாராக உள்ள விடைகளை நம்பியிருக்க வேண்டாம்.
அளவை விட தரம் முக்கியம்: எந்த மாதிரியான் கணித்தத்தை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம். எவ்வளவு எடுத்துக் கொண்டீர்கள் என்பது முக்கியமல்ல. சுலபமாக விடை பெறும் கேள்விகளை விடுத்து உங்களுக்கு இடர்பாடு நேரும் கேள்விகளில் அதிக நேரம் செலவிடுங்கள்.
கறாராக இருங்கள்: விடை தெரியும் வரை ஓயாதீர்கள். என்னதான் ஆகிறது என்று பல்வேறு வழிமுறைகளில் முயற்சி செய்யுங்கள். விடை கிடத்து விட்டாலும் மாற்று விடைகளுக்காகவும் நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
உங்கள் முன்னேற்றத்தை விமர்சன அளவுகோலால் மதிப்பிடுங்கள்: தயாரிப்பில் இருக்கும்போது அவ்வப்போது உங்கள் இலக்குகளை அடைய எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மதிப்பீடு செய்யுங்கள். பரிசோதனை தேர்வுகளை எழுதுவது என்பது உங்கள் திறனை மட்டுமல்லாது உங்கள் பலவீனங்களையும் காட்டும்.
எவ்வளவு சோதனைத் தேர்வுகளை எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்குத் தக்கவாறான தவறுகளும், பலவீனங்களும் தெரியவரும். இவ்வாறு செய்தால் பரிட்சைக்கு தயாராகும் மனோனிலையும் பலமடையும், மேலும் வேகமும் அதிகரிக்கும்.
பிற மாணவர்களுடன் பேசுங்கள்: இதன் மூலம் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்ள முடியும்.
எதைச் செய்யவேண்டும் என்று கற்பதோடு நின்று விடாமல் எதைச் செய்வது கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை அடைய உத்திகள் தெரிந்திருக்கலாம், ஆனால் அதுவே விடையை அடைவதில் தவறாகவும் அமையலாம்.