தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கி தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம் -2006 இன் கீழ் தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.
தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கும் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டது. அதன்படி ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு 2006-07 கல்வியாண்டிலும், அதனைத் தொடர்ந்து 2007-08 கல்வியான்டில் ஏனைய 10 ஆம் வகுப்பவுரை உள்ள மாணவர்களுக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது
இதனை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது.
தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கி தமிழக அரசு வெளிட்டுள்ள உத்தரவு அந்த மாநில அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறிய நீதிபதிகள், இதுபோன்று கர்நாடக, மராட்டிய மாநில அரசுகளும் சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக் காட்டினர்.
மனுதாரர்கள் தங்கள் மனுவில், தமிழநாட்டில் மொழிச் சிறுபான்மையினராக உள்ள தங்களை தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியான மலையாளத்தில் பயிற்சி அளிப்பதை கட்டாயப்படுத்தி மாற்ற முயலும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், அரசியல் அமைப்புச் சட்டப்படி தங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 350 - A -ல், ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியில் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் மாநில அரசுகள் தேவையான வசதிகளை வழங்க வேண்டியது கடமை என்று கூறப்பட்டுள்ளதை மீறும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் உள்ளதாக மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தனர்.