ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன் விளைவாக இந்த ஆண்டு வழக்கத்தைவிட 30 விழுக்காடு அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் ஐடிபி கல்வி நிறுவன மேலாளர் லிண்டன் ஜோசப் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியக் கல்விக் கண்காட்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 75.9 விழுக்காடு வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள் என்றும், இதில் 23.4 விழுக்காடு இந்திய மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் வளர்ச்சி கடந்த ஆண்டு 15 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு அது 30 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்விகற்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் வடஇந்திய மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்க ஆர்வம் காட்டும்போது தென்னிந்திய மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க விரும்புகின்றனர் என்றும் லிண்டன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உயர் கல்வியில் வணிகநிர்வாகவியல் மற்றும் நிர்வாகவியல் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை 43 விழுக்காடு அதிகரித்தது. இந்த ஆண்டு மேலும் 11 விழுக்காடு அதிகரிக்கும். இந்திய மாணவர்கள் உடல் நலத் துறை, நர்சிங், மருத்துவம் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.