மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 1700 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் வருமானவரித்துறை உறுதி அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக கூறி வருமான வரித்துறை வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த 1,700 கோடி ரூபாய் என்பது 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் வருமான வரி நிலுவை, அபராதம், வட்டி ஆகியவற்றின் மொத்த தொகை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.14 லட்சத்திற்கான வரியை தாமதமாக செலுத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, பிறகு அந்த கணக்குகளை தீர்ப்பாயத்தின் தலையீட்டால் நிபந்தனையுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
மற்றோரு புகாரில் காங்கிரசின் 4 வங்கி கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,700 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் வருமான வரித் துறை கோரியுள்ள தொகைகளுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 1700 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் வருமானவரித்துறை உறுதி அளித்தது.
தேர்தல் நேரத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், எந்த பிரச்சனையும் இருக்காது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.