மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் காலுன்றுவதற்காக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பாஜக பயங்கரமாக அப்செட்டில் இருக்கிறது. தன்னுடையக் கோட்டையாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கூட ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தல்களில் மோடி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டும் அடைந்த இந்த தோல்வி மோடிக்கு மக்கள் மத்தியில் இருந்த கவர்ச்சி ஓய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மோடி அலை ஓய்ந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கெ வேண்டிய பொறுப்பு மோடிக்கு முன் உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றிபெற புது வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறார். பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் பாஜக நிர்வாகிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்து உரையாடி வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் பாஜக நிர்வாகிகளையும் இதேப்போல சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார். களத்தில் மக்களோடு இணைந்து பணியாற்றவும் களப்பணி செய்யவும் அறிவுரைக் கூறியுள்ளார்.
தென் மாநிலங்களில் பாஜக் வின் செல்வாக்கு எப்படி இருக்கிறதென்றால் நோட்டாவை விடக் கம்மியான வாக்குகளே பெற்று வருகிறது. அதனால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காலுன்ற பாஜக பெரிதும் ஆவலாக உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி இறுதியில் தமிழகம் வர இருக்கும் மோடி சென்னை அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும், கஜா புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தமிழக பாஜகவினர் மத்தியில் சிறு பயமும் உண்டாகியுள்ளது.
ஏனென்றால் கடந்த முறை மோடி தமிழகத்திற்கு வந்தபோது மக்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததையும் டிவிட்டரில் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்ததும் அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் டெல்டா மாவட்டங்களுக்கு மோடியின் வருகை சரியாக இருக்குமா? என யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.