இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் தொகையை 11% முதல் 128% வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன் தினம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்த விபரங்களை பார்ப்போம்
1. 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.
2. 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
3. 7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.24,190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.
4. 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.32,367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
5. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8,223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும்.
6. 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38,308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.