டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொலை செய்ய பாஜக சதி செய்வதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், கெஜ்ரிவாலின் வாழ்க்கையில் பாஜகவினர் மற்றும் டில்லி ஆளுநர் சக்சேனா விளையாடுவதாக தெரிவித்தார்.
சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும், கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து டில்லி ஆளுநர் மற்றும் மத்திய பாஜக தவறான அறிக்கைகளை வெளியிடுவது எங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும் என்றும் இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் டில்லி ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.