புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்த பிறகு ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
இதனிடையே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு கடந்த 12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் கஷ்டப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதை அடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது காவலை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.