டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் ஆறு மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன.
வழக்கமாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அவர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்று வந்த நிலையில் இந்த முறை அனைத்து மாநில முதல்வர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட ஆறு மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் பாரபட்சமாக நிதி ஒதுக்குவதை கண்டித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும் நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டு பெரும் வாய்ப்பு இருக்கும் நிலையில் அதை புறக்கணிப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றன