மக்களவை தேர்தலையொட்டி மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நடைபெறும் வாகனப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 13 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிராவில் இது இறுதிக்கட்ட வாக்குப்பதிவாகும். இதன் காரணமாக தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மும்பையில் வாகனப் பேரணி நடத்துகிறார். காட்கோபர் எல்.பி.எஸ் மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனப் பேரணி நடத்துகிறார். அப்போது பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகனப் பேரணியின் காரணமாக எல்.பி.எஸ் சாலையில் காந்தி நகர் சந்திப்பிலிருந்து நௌபாடா சந்திப்பு வரையிலும், மஹுல்-காட்கோபர் சாலையில் மேக்ராஜ் சந்திப்பிலிருந்து ஆர்பி கடம் சந்திப்பு வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என மும்பை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.