குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் டிஆர்பி என்ற பெயரில் கேம் ஜோன் ஒன்று செயல்பட்டு வந்தது. நான்காண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விளையாட்டு மைதானம் இரண்டடுக்குகளை கொண்டது. தற்காலிக இரும்பு சட்டங்களை கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மையத்தில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. 99 ரூபாய் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் இங்கு விளையாடுவதற்காக வருகை தந்திருந்தனர்.
தீயில் கருகி 33 பேர் பலி:
மைதானத்தின் அருகிலேயே மேம்பாட்டு பணிக்காக வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியத் துவங்கியுள்ளது. சற்று நேரத்தில் மொத்த மைதானமும் தீப்பற்றி எரிந்ததில், உள்ளே சிக்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும் இந்த தீ விபத்து சிக்கி 33 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும், அதில் 9 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து இருப்பதால் அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்த நீதிமன்றம்:
தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரத்தை குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளை (மே 27) விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.