காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய இளைஞனின் பார்வையை பறிக்க ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த இளம்பெண் அமீனா பக்ரமி, கடந்த 2004ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மஜீத் என்ற இளைஞன் அவரை ஒருதலையாகக் காதலித்தான். தன்னை காதலிக்கும்படி மஜீத் கூறியதை அமீனா நிராகரித்துள்ளார்.
இதனால் அமீனாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான் மஜீத். ஆசிட் ஊற்றப்பட்டதால் அமீனாவின் முகம் சிதைந்தது. அவரது கண்களும் பார்வையை இழந்தன. தற்போது பார்வையற்றவராக வாழ்ந்து வருகிறார் அமீனா.
இந்த நிலையில், இந்த வழக்கு ஈரான் நீதிமன்றத்திற்கு வந்தது. விசாரணையின்போது, சாட்சியமளித்த அமீனா, எனது பார்வை பறிபோனது போல், மஜீத்தின் பார்வையும் பறிபோக வேண்டும். ஆனால் அவன் என் முகத்தை காட்டுமிராண்டித் தனமாக சிதைத்தது போல் சிதைக்க வேண்டாம். அவனது கண்ணில் அவனே ஆசிட் ஊற்றி குருடாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமீனாவுக்கு நஷ்ட ஈடு வழங்கி, அவளை திருமணம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் மஜீத் கூறினார். ஆனால் மஜீத்தின் இந்த கோரிக்கையை ஏற்க அமீனா மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய 3 நீதிபதிகள், மஜீத்தின் கண்களில் ஆசிட் ஊற்றி அவரின் பார்வையை பறிக்க உத்தரவிட்டனர். இந்த தண்டனை மீது மஜீத் மேல் முறையீடு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...