Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வீரன்' வாஞ்சிநாதன்!

'வீரன்' வாஞ்சிநாதன்!
நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் என்று எடுத்துக் கொண்டால் நீண்டதொரு பட்டியலை தயாரிக்கலாம்.

இத்தகையோர் வரிசையில், கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான 'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.

நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.

தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.

ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.

புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.

இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.

வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, அன்று தனது துயிலைக் கலைத்தது.

சும்மா வரவில்லை சுதந்திரம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு இச்சம்பம் நிச்சயம் உணர்த்தியிருக்கும். வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாறு நிச்சயம் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்பலாம்!

Share this Story:

Follow Webdunia tamil