Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொகுதிக் கண்ணோட்டம்- கோவை

தொகுதிக் கண்ணோட்டம்- கோவை
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற பெருமை கொண்டது கோவை மாநகரம். ஏராளமான தொழிற்சாலைகள், தொழிலாளர்களை தன்னகத்தே கொண்டு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக இது விளங்குகிறது.

கடந்த 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்கள் என தேசியக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகம் அங்கு இருந்து வந்துள்ளது. இதுவரை அ.இ.அ.தி.மு.க. இத்தொகுதியில் ஒருமுறை கூட வெ‌ன்றதில்லை.

webdunia photoWD


இங்கு அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், தி.மு.க., பா.ஜ.க. தலா 2 முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 1952, 1962, 1984, 1989, 1991ஆம் ஆண்டுகளில் கோவைத் தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. 1957, 1971, 1977, 2004ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 1980, 1996ஆம் ஆண்டுகளில் தி.மு.க.வும், 1998, 1999ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க.வும் கோவைத் தொகுதியில் வெற்றி பெற்றன. 1967ஆம் ஆண்டில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றியை ஈட்டியது.

தற்போது இத்தொகுதியில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 344 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஐந்து லட்சத்து 88 ஆயிரத்து 550 ஆண்களும் ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 794 பெண்களும் அடங்குவர்.

கோவைத் தொகுதியில் முன்பிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள்: சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் இடம் பெற்றுள்ள தொகுதிகள்: பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர்.

இவற்றில் பேரூர், திருப்பூர் ஆகியவை தற்போது மாற்றம் கண்டு, சூலூர், கவுண்டம் பாளையம் தொகுதிகள் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கோவை மேற்கு- கிழக்கு தொகுதிகளுக்கு பதிலாக கோவை வடக்கு- தெற்கு தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தொகுதி நிலவரம்: கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், 5 லட்சத்து 4 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.) 3 லட்சத்து 40 ஆயிரத்து 476 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இம்முறை கோவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அக்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு நிறுத்தப்படலாம் என்றும் பேச்சு நிலவுகிறது.

அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.- அ.இ.அ.தி.மு.க. இரண்டுமே இத்தொகுதியைக் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் தாமோதரன் உட்பட பலர் கோவையில் போட்டியிடுவதற்கு மனு செய்துள்ளனர்.

சட்டப் பேரவை முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது கோவைத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வலுவாக உள்ளது. கோவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் பெரும்பாலானவை அ.இ.அ.தி.மு.க. வசம் உள்ளன.

சிங்காநல்லூர் (சின்னசாமி), கோவை மேற்கு (மலரவன்), பல்லடம் (செ.ம. வேலுசாமி), பேரூர் (எஸ்.பி. வேலுமணி) ஆகிய தொகுதிகள் அந்த கட்சி வசம் உள்ளது.

தற்போது கோவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் உள்ளது. மீண்டும் அந்த கட்சி இங்கு போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனவே முக்கியப் போட்டி காங்கிரஸ்- அ.இ.அ.தி.மு.க. இடையே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தொகுதியில் ஏற்கனவே பலம் பெற்று விளங்கும் அ.இ.அ.தி.மு.க., தற்போது பா.ம.க. வரவால் புதுத் தெம்பு பெற்றுள்ளது. எனினும் பா.ம.க.விற்கு என இங்கு வாக்கு வங்கி இல்லாததால் அதன் பலன்கள் குறைவாகவே இருக்கும்.

தே.மு.தி.க., அண்மையில் ஏற்படுத்தப்பட்ட கொங்கு வேளாளகவுண்டர் பேரவை என்ற அரசியல் அமைப்பு ஆகியவை கணிசமாக வாக்குகளை பிரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுவரை வெற்றி பெறாத அ.இ.அ.தி.மு.க. இம்முறை வெற்றிக் கணக்கை துவக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் வாக்குப்பதிவின் போது எதிர்மறையாக எதிரொலிக்கும் என்ற அச்சமும் அக்கட்சியினர் இடையே நிலவுகிறது.

எனவே நிறுத்தப்படும் வேட்பாளர், தேர்தல் பிரச்சாரம், உள்ளூர் பிரச்சனைகள், இறுதி கட்டத்தில் மேற்கொள்ளப்படும் வாக்கு வேட்டை போன்ற அம்சங்களே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நம்பலாம்.


Share this Story:

Follow Webdunia tamil