மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பணியை மேலும் பலப்படுத்த, வருமானவரித் துறை குழுவை அமைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி கூறியதாவது:
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்த வழிமுறைகளை அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. பிரச்சாரத்தின் போது தினமும் எத்தகைய கணக்குகளை பராமரிக்க வேண்டும், என்னென்ன விவரங்களை எப்போது அளிக்க வேண்டும் போன்ற விவரங்களை ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகளின்படி செலவினங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும். தேர்தலில் சட்ட விரோதமாக பணம் செலவிடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பணியை மேலும் பலப்படுத்தும் வகையில், சிறப்பு நடவடிக்கையை ஆணையம் எடுத்துள்ளது. அதன்படி, வருமானவரித்துறை வல்லுனர்கள் கொண்டு குழு ஒன்று ஏற்படுத்தப்படும். வேட்பாளர் தேர்தல் செலவுக் கணக்குகள் தொடர்பான தகவல்களை ஆராய, தேர்தல் ஆணையத்திற்கு இந்தக் குழு உதவி புரியும்.
வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கென உதவி மையம் அமைக்கவும், இணையத்தில் வாக்காளர் பட்டியலை பார்வையிட உரிய வசதிகள் செய்து தரவும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் என்.கோபாலசாமி தெரிவித்தார்.