இலங்கேஸ்வரனின் மறு வருகை!
, சனி, 16 பிப்ரவரி 2008 (16:51 IST)
நாடக வித்தகர் ஆர். எஸ். மனோகர் நடித்து நாடக உலகில் மிகப் பெரிய எழுச்சியையும், இதிகாச நம்பிக்கையாளர்களிடையே பெரும் சர்ச்சையையும் உருவாக்கிய இலங்கேஸ்வரன் நாடகம், சென்னை சபாக்களில் மறுவலம் வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேடை நாடகத்தில் ஆர்.எஸ். மனோகர் கையாண்ட நவீன யுக்திகள், நாடகக் கலையை அதன் சிகரங்களை எட்டச் செய்தது மட்டுமின்றி, திரைப்படங்களை விட அதிக கட்டணத்தில் காணத் தகுதிபெற்றதாக தனது நாடகங்களை மாற்றியது. புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட கற்பனைகளுக்கும் உருவம் கொடுத்து, உயிரூட்டி காண்போரைத் திகைக்கச் செய்தார் மனோகர்.1970
ஆம் ஆண்டுகளில் மனோகரின் நாடகங்களைப் பார்த்தவர்கள் அதுவே ஒரு பெரும் பேறு என்பதுபோல் பேசுவார்கள். மேடையில் மழை பெய்யும், வாளால் வெட்டப்பட்ட தலை துண்டாக எகிறிச் சென்று விழும், புஷ்பக விமானம் மேடையிலேயே பறந்து கடக்கும். அன்றைக்கு இருந்த தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி இப்படிப் பல அற்புதங்களை நிகழ்த்தி ஏகத்திற்கு மக்களை கிரங்கடித்தார் மனோகர்.
இப்படிப்பட்ட சாகசக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றதில் மிகவும் பேசப்பட்டதுதான் இலங்கேஸ்வரன் நாடகம். இந்நாடகம் பிரம்மாண்டமான தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்புகளுடன் அரங்கேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.சீதையை இராவணின் மகளாக கூறி எழுத்தப்பட்ட இராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு - தனது மகளின் துயரத்தைக் கண்டு துடிப்பவனாகவும், அவள் காட்டில் துன்பமுறுவதை சகியாமலேயே இலங்கைக்கு இராவணன் கடத்தி வந்ததாகவும் சித்தரிக்கும் கதையை அற்புதமான நாடகமாக்கினார் மனோகர்.இதனால் அந்நாளில் மிகப் பெரிய சர்ச்சை எழுந்தது. இராவணனை நல்லவனாக சித்தரிக்கும் இந்நாடகத்திற்கு மூதறிஞர் இராஜாஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அதனை ஏற்காமல் அரகேற்றப்பட்ட நாடகத்தை, மனோகரின் அழைப்பிற்கிணங்க வந்து பார்த்த இராஜாஜி பாராட்டியதாகவும் கூறப்பட்டதுண்டு. இராமயணத்தை மிகவும் எதிர்த்த தந்தை பெரியார் இந்நாடகத்தைக் கண்டு பாராட்டியதாகவும் சொல்வார்கள். பேரரிஞ்சர் அண்ணா, ம.பொ.சி., பொதுவுடைமைத் தலைவர் ஜீவா ஆகியோரும் பார்த்து பாராட்டியுள்ளனர்.
1,000 தடவைக்குமேல் அரகேற்றப்பட்ட அந்நாடகத்தை - மனோகரின் மறைவுக்குப் பிறகு அவருடைய நாடகக் குழுவினர் மீண்டும் அரகேற்ற முற்பட்டபோது, அன்று மனோகர் இருந்து நடத்தியதைப் போன்று இன்று இவர்களால் நடத்த முடியுமா என்ற ஆதங்கத்துடனான கேள்வி எழுந்தது.
மனோகர் விட்டுச் சென்ற திறனையும், மறபையும் இதோ நாங்கள் முழுமையாக காப்பாற்றியுள்ளோம் என்று கூறுவதுபோல, மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி இலங்கேஸ்வரன் மீண்டும் அரங்கேறியது. நாரத கான சபா நிரம்பி வழிய நாடகம் துவங்கியது.நாடகத்தின் துவக்கத்திலேயே, தன்னைச் சந்தித்த நாரதரிடம், தனது மருமகனின் (ஸ்ரீ இராமனின்) பெருமையை இராவணன் கூறுவதில் தொடங்கி, முன்நிகழ்வு கூறலாக இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்குப் பிறந்த மகளால் இலங்கைக்கு பேரழிவு ஏற்படும் என்று பிரம்மா கூற, அப்பெண் மகவை அழித்துவிடுமாறு விபீடனும், கும்பகர்ணனும் வலியுறுத்த, சீதையை ஒரு பேழையில் வைத்து கடலில் விட்டுவிடுகிறான் இராவணன். அந்தப் பேழை பேரரசன் ஜனகனின் ஏர்க்காலில் சிக்க, அதிலிருந்த குழந்தையை வளர்க்கின்றான் என்றாகி, அதன் பிறகு நாம் கேள்விப்பட்டப்படியே செல்லும் இராமாயணக் கதையை மிக அற்புதமாக கொண்டு செல்கின்றனர்.குழந்தையைக் கொண்ட பேழையை மாயன் கடலில் விடுவதும், சீதையை புஷ்பக விமானத்தில் இராவணன் கொண்டு செல்வதும், தன்னை வழிமறித்த ஜடாயுவை இராவணன் வெட்டி வீழ்த்துவதும், இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட, ஹனுமான் விஸ்வ ரூபம் எடுப்பதும் தத்ரூபமாக சித்தரிக்கின்றனர்.இந்நாடகத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் எவ்வளவு இனிமை. கேட்டதும் புரியும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்ட அந்த பாடல்கள் காலத்தைக் கடந்து இனிக்கின்றன. இலங்கேஸ்வரனின் வாழ்க்கையில் மறைந்துள்ள ரகசியத்தைப்போல, அவனது குடி மகனின் வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் நுழைவதையே நகைச்சுவையாக்கியுள்ளது மிக அருமை.அன்றல்ல, இன்றல்ல... என்றென்றைக்கும் சுவை குன்றாத இதிகாசம் இராமயணம். அதைப் போலவே, இராமாயணம் இருக்கும் வரை, சிறப்புக் குன்றாமல் இலங்கேஸ்வரன் நாடகமும் மறையாமல் நடக்கும் என்பதை உறுதியுடன் புரியவைத்துள்ளனர் வி.என்.எஸ். மனோகர் நாடக மன்றத்தினர்.ஆர்.எஸ். மனோகருடன் 35 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிய ஆர். நாகராஜன் ஆக்கத்தில் குறுகிய காலத்தில் சென்னை சபாக்களில் 12 முறை அரங்கேறிவிட்டார் இலங்கேஸ்வரன்.ஆர்.எஸ். மனோகர் தாங்கி புகழெய்திய இராவணன் வேடத்தை ஷண்முகம் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்ரீ ராமர் வேடத்தை ஏற்ற கவின், லட்சுமணன் வேடமேற்ற சதீஷ் குமார், ஒரு காட்சியில் வந்தாலும் பரதனின் சோகத்தை முழுமையாக வெளிப்படுத்திய குமார், சீதையாய் நடித்த ஜெயந்தி, சிங்கியாய் நடித்த மனோகரி... பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்.
இந்நாடகத்தின் அரங்க அமைப்புகள் மாற்றியமைக்கப்படும்வரை மக்களை மகிழ்விக்கும் பாத்திரங்களை ஏற்ற முருகேசன், நாகராஜன் நன்கு அசத்தினர்.
இசையும், பாடலும் இன்றைக்கும் அற்புதம். தண்டபானி, சுரேந்தர் குரலினிமை நாடகத்தை அந்தக் காலகட்டத்திறகு அழைத்துச் சென்று வாழவைக்கிறது.
எத்தனை கேளிக்கைகள் வந்தாலும், கலைகள் அனைத்தும் ஊடகங்களில் சென்று முடங்கிக்கொண்டாலும், அந்த வரையறைகளுக்கு கட்டுப்படாமல் முரட்டுத்தனமாக நிமிர்ந்து நின்று தனித் தன்மையுடனும், பெருமையுடனும் என்றைக்கும் பிரகாசிக்கும் மனோகரின் நாடகங்கள். ஏனெனில் அவரின் நாடகங்கள் அற்புதங்கள்....
ஆதலால் காலத்தை தாண்டியவை!