தினமும் எழுந்து பல் துலக்குகிறோம். அன்றாட கடமைகளைச் செய்கிறோம். அதேபோல் தினமும் குறைந்தது ஒரு கி.மீட்டர் தொலவுக்காவது நடப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
நடைபயிற்சி அல்லது `வாக்கிங்' செல்வதற்கு வயது அவசியமல்ல. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அன்றாடம் குறிப்பிட்ட தொலைவிற்காவது நடந்து செல்லலாம்.
ஒரு சிலர் இருக்கிறார்கள். வீட்டிற்கு முன் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஏறி, அலுவலகத்திற்கு அல்லது வேலை செய்யும் பணியிடங்களுக்குச் சென்று விட்டு, மீண்டும் அங்கிருந்து டூ-வீலரில் ஏறி வீட்டிற்கு வந்து விடுவார்கள்.
இதில் அவ்வப்போது எண்ணெய்ப் பதார்த்தங்களை வேறு ஒரு பிடி பிடிப்பார்கள். வீட்டிலும் எந்தவிதமான உடல் உழைப்புக்கும் அவசியமில்லாமல் போகும்போது, உபரியாகச் சேரும் கொழுப்புச் சத்தானது தொப்பையை அதிகரிக்கச் செய்யும்.
நாம் உண்ணும் உணவு முழுவதுமாக செரித்து, உடலுக்குத் தேவையான சக்தியை அளித்தாலே போதும். நோயின்றி வாழலாம்.
உடல் பருமன் போடும்வரை எந்தவித முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டு, பின்னர் நடைபயிற்சி மேற்கொள்வதை விடவும், அன்றாட வேலைகளில் ஒன்றாக நடப்பதையும் வைத்துக் கொள்ளலாமே.
நடைபயிற்சியை பொதுவாக அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்ள வேண்டும். மாலை நேரத்திலும் நடைபயிற்சி செய்யலாம்.
கூடிய வரை காலை நேரத்தில் உணவு எதையும் சாப்பிடாமல் நடைபயிற்சி செய்யலாம். பயிற்சியை முடித்து விட்டு ஒரு கப் அளவு காபி அல்லது டீ அருந்தலாம்.
உடலில் உள்ள வியர்வை வெளியேறுவதால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, அதிகாலை நேரத்தில் மாசற்ற காற்றினை சுவாசிப்பதாலும் உடலுக்கு கூடுதல் பொலிவு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
எனவே எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விடவும், வாழும் வரை நோயின்றி வாழ வேண்டும் என்பதால், அதற்கு நடைபயிற்சி மேற்கொண்டு நலமுடன் வாழ்வோம்.